ஈரோடு சூரம்பட்டியில் குடி’மகன்கள் தொல்லை

0
20
Share on Facebook
Tweet on Twitter

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுக்கடைகள் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 235 டாஸ்மாக் கடைகளில் முதலில் 169 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 66 கடைகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் ஈரோடு மாநகராட்சியில் மட்டும் வெறும் 9 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதிலும், சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் அடுத்த வாரம் முதல் இந்த கடையும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மீதமுள்ள 8 கடைகள் மட்டுமே இயங்குவதால் குடிமகன்களின் கூட்டம் தாறுமாறாக குவிகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடை இயங்கும் பகுதிகளில் நீண்ட வரிசையில் நிற்கும் குடிமகன்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சூரம்பட்டி திரு வி.க., நகர் பகுதியில் சங்குநகர்- சூரம்பட்டிவலசு பிரிவு சாலை அருகிலுள்ள இக்கடை அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. சாலையின் இருப்புறமும் இரு சக்கர வாகனங்களை குடிமகன்கள் நிறுத்தி விட்டு கியூவில் நின்று கொள்கின்றனர்.  இதன் காரணமாக இவ்வழியே வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. தற்போது மாநகராட்சியில் டாஸ்மாக் கடை எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் அருகாமையில் உள்ள மதுக்கடைக்கு தான் அதிகளவில் குடிமகன்கள் செல்கின்றனர். கூட்ட நெரிசலால் பாரில் அமர்ந்து குடிக்க வழியின்றி சாலை ஓரத்திலேயே குடிமகன்கள் குடித்து விட்டு, அங்கேயே பிளாஸ்டிக் டம்ளர்களையும், பாட்டில்களையும், காலி தண்ணீர் பாக்கெட்டுகளையும் போட்டு சென்று விடுகின்றனர். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர். முன்பெல்லாம் இந்த சாலை வழியே அதிகளவில் பெண்கள் சென்று வந்தார்கள்.  தற்போது குடிமகன்களின் கலாட்டா தாங்க முடியாமல் இவ்வழியே செல்வதற்கே பெண்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குடிமகன்களின் தொல்லை தாங்க முடியாத இப்பகுதி குடியிருப்புவாசிகள் இந்த கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
Next articleபத்திரப்பதிவு பிரச்னை கட்டுமானத் தொழில் கடும் பாதிப்பு: கேள்விக்குறியாகும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

Leave a Reply Cancel reply