காமராஜர் பல்கலை. உறுப்புக்கல்லூரியில் எம்பிஏ படித்த மாணவர்கள் சான்றிதழ் செல்லாது

0
17
Share on Facebook
Tweet on Twitter

மதுரை : மதுரை, அவுட்போஸ்ட் அருகே காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, கடந்த 1994ல் துவங்கப்பட்டது. இங்கு 2008 முதல் பிபிஏ (இளநிலை நிர்வாகவியல்) படிப்பு, தொடர்ந்து 2013 முதல் எம்பிஏ நிர்வாகவியல் படிப்பும் துவங்கி நடந்து வந்தது. நடப்பாண்டில் காமராஜர் பல்கலை உத்தரவின்படி, எம்பிஏ படிப்புக்கான விண்ணப்பங்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. எம்பிஏ நிர்வாகவியல் படிப்புக்கு கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏஐடிஇசி) அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கல்லூரி நிர்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக ஏஐடிஇசி அனுமதி பெறாமல் எம்பிஏ நிர்வாகவியல் படிப்பை நடத்தி வந்துள்ளது. 2013-15ல் 24 பேர், 2014-16ல் 60 பேர், 2015-17ல் 120 பேர் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளனர். 2016-18 பேட்ஜில் 125 பேர் படித்து வந்தனர். இவர்கள் இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்வதில் குழப்பம் நீடிக்கிறது. மேலும், ஏற்கனவே எம்பிஏ பட்டம் பெற்ற மாணவர்களின் சான்றிதழும் செல்லாது என்பதால், வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. எம்பிஏ நிர்வாகவியல் துறையை, பிபிஏ நிர்வாகவியல் துறையுடன் சேர்த்து நடத்த வேண்டும் என பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கல்லூரி முதல்வர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து வணிகவியல் துறையின் கீழ் எம்பிஏ படிப்பை நடத்தி வந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் கல்லூரி செயல்பட்டு வந்தது. இப்போது ஏஐடிஇசியின் அனுமதி பெறவில்லை என்று கூறி பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இப்பிரச்னையில் கல்லூரி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும்,’’ என்றார். எம்பிஏ பட்டம் பெற்ற மாணவர் பாண்டியராஜன் கூறும்போது, ‘‘2015ல் எம்பிஏ பட்டம் பெற்றேன். அதன்பின்பு எம்பில் படிப்பும் முடித்துள்ளேன். எம்பிஏ பட்டம் செல்லாது என்றால் எம்பில் படிப்பும் செல்லாது. 4 வருட படிப்பும் வீண் என்பதால், என் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.மேலும்  3 கல்லூரிகளில் நிறுத்தம்ஏஐடிஇசி அனுமதி பெறாததால் தென்மாவட்டங்களில், மேலும் 3 கல்லூரிகளில் எம்பிஏ படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleஇலங்கை கடற்படையால் 6 தமிழக மீனவா்கள் கைது
Next article7 மாதங்களுக்கு பின் 1,380 கனஅடி நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது

Leave a Reply Cancel reply