தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

0
21
Share on Facebook
Tweet on Twitter

சென்னை: கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி முதல் துவங்கிய பருவமழை அங்கு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட நேற்று பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. சென்னை நகரில் இதுநாள் வரை காலை பொழுது விடிந்தாலே நண்பகல் போன்று வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் மிதமான வெயிலே தலைகாட்டியது. இதனால் வாட்டி வதைத்த வெயிலில் இருந்து சற்று விடுதலையடைந்த விதத்தில் மக்கள் மகிழ்வுடன் நாளை துவக்கினர்.இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவியுள்ளதாக குறிப்பிட்டார். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் உத்திரமேரூரில் அதிகப்பட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்றும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
Next articleடெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

Leave a Reply Cancel reply