நாகர்கோவிலில் வெள்ளை மாளிகையுடன் நாஞ்சில் பொருட்காட்சி: தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை நடக்கிறது

0
15
Share on Facebook
Tweet on Twitter

நாகர்கோவில்: நாகர்கோவில் அனாதைமடம் மைதானத்தில் நடந்து வரும் நாஞ்சில் பொருட்காட்சியில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளை மாளிகை மற்றும் ஜுராசிக் ரோபாட் மிருகங்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. நாஞ்சில் பொருட்காட்சி நிறுவனம் நாகர்கோவில் நகரில் ஆண்டுதோறும் பொழுதுபோக்கு பொருட்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 11வது முறையாக நாகர்கோவில் அனாதைமடம் பொருட்காட்சி மைதானத்தில் நாஞ்சில் பொருட்காட்சி நிறுவனம் பொழுதுபோக்கு பொருட்காட்சியை அமைத்துள்ளது. பொருட்காட்சி கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொருட்காட்சிக்கு வருபவர்களை 14 அடி உயர, 40 அடி நீளமுள்ள ராட்சத ராஜாளி கழுகு வரவேற்கும் விதமாக நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் வெள்ளை மாளிகை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை மாளிகை 180 அடி நீளமும், 80 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வழியாக பொருட்காட்சி அரங்குக்குள் நுழைபவர்களை கேரள மாநில பாரம்பரிய உடையணிந்த 9 பேர் 3 முகப்பட்டம் கட்டப்பட்ட யானைகள் மீது அமர்ந்து சாமரம் வீசியபடி அமர்ந்தும், நின்ற நிலையிலும், யானைகள் துதிக்கையை உயர்த்தி, அசைத்தும் வரவேற்பதாக அமைந்துள்ளது.  அதற்கு அடுத்தபடியாக ஜுராசிக் ரோபாட் மிருகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிங்கம், புலி, குதிரை, வரிக்குதிரை, காட்டுயானை, ஒட்டக சிவிங்கி, மனிதக்குரங்கு, பனிக்கரடி, டைனோசர், காட்டுமாடு, கங்காரு, மான்கள் போன்றவை ரோபாட் மிருகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு இயற்கையாக அமைந்திருப்பதைப் போன்ற உருவ அமைப்பு ஒத்துப்போய் இருப்பதுதான் இவற்றின் சிறப்பு அம்சம் ஆகும். ஒவ்வொரு மிருகத்துக்கும் உரிய சத்தம் ஒலிபெருக்கி மூலம் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொருட்காட்சிக்கு வருவோருக்கு அடர்ந்தவனப்பகுதிக்குள் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முடிவில் சாய்பாபா ஆசி வழங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இவைதவிர ஜெயண்ட் வீல், கொலம்பஸ், டோராடோரா, பிரேக் டான்ஸ், கோஸ்டர், ஹெலிகாப்டர் போன்ற ராட்டினங்களும், தண்ணீரில் சிறுவர்கள் விளையாடும் படகு பலூன், சிறுவர்களுக்கான ராட்டினங்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பொருட்காட்சி அரங்கில் சுவையான உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளன. இந்த பொருட்காட்சி சிறுவர், சிறுமிகள் தங்களது கோடைகால விடுமுறையை குதூகலமாக கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.  இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரை நடைபெறுகிறது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகுமரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா?
Next articleகரூரில் நடந்த மணல் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply