அத்தியாயம் 24 – காக்கையும் குயிலும்

0
87
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM
Click Image Below And Get Our App For Free

அத்தியாயம் 24 – காக்கையும் குயிலும்

இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து ‘சோ’ என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக்கிணங்க, ஓர் இளம் பிள்ளையின் இனிய குரல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடலைப் பண்ணுடன் பாடியது.

“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!”

இதைக் கேட்ட வந்தியத்தேவன் கண்ணை விழித்துப் பார்த்தான். அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில் கொன்னை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தன. சேந்தன் அமுதன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக் கொண்டு, வாயினால் பாடிக் கொண்டே, கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறு புனைந்திருந்த சேந்தன் அமுதன், சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான். இப்படி இனிமையாகவும் அழகாகவும் பாடும் பிள்ளையின் குரலைக் கேட்க அவனுடைய அன்னை கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணத்துடன் வந்தியத்தேவன் எழுந்தான். அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? எதற்காகக் கையில் வாளும் வேலும் ஏந்திக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டும்? எந்த நேரமும் பிறரைக் கொல்லுவதற்கும் பிறரால் கொல்லப்படுவதற்கும் ஆயத்தமாக ஏன் திரிய வேண்டும்? இத்தகைய எண்ணங்கள் அவன் மனத்தில் உதித்தன. ஆனால் சிறிது நேரத்தில் மனம் மாறியது. சேந்தன் அமுதனைப் போல் உலகில் எல்லாருமே சிவ பக்தர்களாயிருந்து விடுவார்களா? திருடர்களும் கொள்ளைக்காரர்களும் வஞ்சகர்களும் எளியவர்களைத் துன்புறுத்துவதில் களிப்படைகிறவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள். இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். அரசாங்கம் நடத்த அரசர்களும் அமைச்சர்களும் வேண்டும். இவர்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேளக்காரப் படைகளும் வேண்டும். தன்னைப் போல் அரசர்களும் ஓலை கொண்டு போகவும் ஆட்கள் வேண்டும்…. ஆம்! இன்று சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள் சக்கரவர்த்தியைப் பார்த்தால்தான் பார்த்தது. அவர் வந்து விட்டால் அது சாத்தியமில்லாமலே போகலாம்….

பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலேயிருந்த தாமரைக் குளத்தில் குளித்து விட்டு வந்து, வல்லவரையன் ஆடை ஆபரணங்கள் அணிந்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டான். சக்கரவர்த்தியைத் தரிசனம் செய்யப் போகும்போது சாதாரணமாகப் போகலாமா? இதற்காகத் தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது பழுவூர் இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனத்திற்குள் இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது.

காலை உணவுக்குப் பிறகு சேந்தன் அமுதன் உச்சிவேளை பூஜைக் கைங்கரியத்துக்காகப் பூக்குடலையுடன் கிளம்ப, வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்பட்டான் இருவரும் நடந்தே சென்றார்கள். கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குதிரை நன்றாக இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம். சீக்கிரத்தில் அக்குதிரையை, தான் துரிதப் பிரயாணத்துக்கு உபயோகப்படுத்த வேண்டி வரலாம், யார் கண்டது? எப்படியானாலும், அது இங்கே இருப்பதுதான் நல்லது. கோட்டை வாசல் போய்ச் சேரும் வரையில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

Click Image Below And Get Our App For Free

“உன் அன்னையைத் தவிர உனக்கு வேறு உற்றார் உறவினர் யாரும் கிடையாதா?” என்று வல்லவரையன் கேட்டதற்கு அமுதன் கூறியதாவது; “இருக்கிறார்கள், என் அன்னையுடன் கூடப் பிறந்த ஒரு தமக்கையும் தமையனும் உண்டு. தமக்கை காலமாகி விட்டாள்; தமையனார் கோடிக்கரைக் குழகர் கோயிலில் புஷ்ப கைங்கரியம் செய்கிறார். அத்துடன் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றிப் பாதுகாக்கும் பணியும் செய்து வருகிறார்… அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு; புதல்வி…” என்று நிறுத்தினான்.

“புதல்விக்கு என்ன?”

“ஒன்றுமில்லை எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள்…”

“உன் மாமனின் மகள் ஊமை இல்லையே?” என்றான் வந்தியத்தேவன்.

“இல்லை, இல்லை!”

“அப்படியானால் நன்றாய்ப் பாடக் கூடியவள் என்று சொல்லு, உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவாளா?”

“அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி ‘குயில், காக்கையை விட நன்றாய்ப் பாடுமா?’ என்று கேட்பது போலிருக்கிறது. பூங்குழலி பாடினால், சமுத்திர ராஜா அலை எறிந்து ஓசை செய்வதை நிறுத்தி விட்டு அமைதியாகக் கேட்பார்.ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய் மறந்து நிற்கும்…”

“உன் மாமன் மகளின் பெயர் பூங்குழலியா? அழகான பெயர்!”

“பெயர் மட்டுந்தானா அழகு?”

“அவளும் அழகியாகத்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், நீ இவ்வளவு பரவசமடைவாயா?”

“மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்.”

சேந்தன் அமுதனுடைய உள்ளம் சிவபக்தியிலேயே பூரணமாக ஈடுபடவில்லையென்பதை வல்லவரையன் கண்டு கொண்டான்.

“அப்படியானால் உனக்குத் தகுந்த மணப் பெண் என்று சொல்லு. மாமன் மகளாகையால் முறைப் பெண்ணுங் கூடத்தானே? கல்யாணம் எப்போது?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

“எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். நான் அவளுக்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவன். பழைய நாட்களிலே போலப் பூங்குழலிக்குச் சுயம்வரம் வைத்தால் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து போட்டி போடுவார்கள்! தமயந்தியை மணந்து கொள்வதற்கு வானுலகத்திலிருந்து தேவர்கள் வந்தது போல் வந்தாலும் வருவார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்விதமெல்லாம் ஒருவேளை நடவாது…”

“அப்படியானால் உன்னை மணந்து கொள்ள அவள் விரும்பினாலும் நீ மறுத்து விடுவாய் என்று சொல்லு!”

“நன்றாயிருக்கிறது; இறைவன் என் முன்னால் தோன்றி, ‘நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்த உடம்போடு கைலாசத்துக்கு வருகிறாயா? அல்லது பூலோகத்திலிருந்து பூங்குழலியுடன் வாழ்கிறாயா?” என்று கேட்டால் ‘பூங்குழலியுடன் வாழ்கிறேன்’ என்றுதான் சொல்லுவேன்; ஆனால் நான் சொல்லி என்ன பயன்?”

“ஏன் பயன் இல்லை? உனக்குச் சம்மதமாயிருக்கும்போது அநேகமாகக் கல்யாணம் ஆனது போலத்தானே? எல்லாரும் பெண்களைக் கேட்டுக் கொண்டுதானா கலியாணம் செய்கிறார்கள்? உதாரணத்துக்கு, பெரிய பழுவேட்டரையர் அறுபத்தைந்து வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே! அந்த ராணியின் சம்மதத்தின் பேரிலா திருமணம் நடந்திருக்கும்!…”

“அண்ணா! அது பெரிய இடத்துச் சமாசாரம், நாம் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்? முக்கியமாக, உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் கோட்டைக்குள் போகிறீர்கள்; கோட்டைக்குள் பழுவேட்டரையர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் பேசினால் ஆபத்து வரும்!…”

“ஏது தம்பி, ஒரேயடியாகப் பயமுறுத்துகிறாயே?”

“உண்மையைத்தான் சொல்கிறேன் மெய்யாக, இரண்டு பழுவேட்டரையர்களுந்தான் இப்போது சோழ சாம்ராஜ்யத்தையே ஆளுகிறார்கள். அவர்களுடைய அதிகாரத்துக்கு மிஞ்சிய அதிகாரம் வேறு கிடையாது.”

“சக்கரவர்த்திக்குக் கூடவா அவர்களை விட அதிகாரம் இல்லை?”

“சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை அவர் தாண்டுவதில்லை என்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். அவருடைய சொந்தப் புதல்வர்களுடைய பேச்சுக் கூடக் காதில் ஏறுவதில்லை என்கிறார்கள்.”

“அப்படியா சமாசாரம்! பழுவேட்டரையர்களுடைய செல்வாக்கு அபாரமாய்த்தான் இருக்க வேண்டும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுக்கு இத்தனை செல்வாக்கு இல்லை அல்லவா?”

“இல்லை; அதிலும் சக்கரவர்த்தி தஞ்சைக்கு வந்த பிறகு பழுவேட்டரையர்களுடைய அதிகாரம் எல்லையில்லாமல் போய் விட்டது. அவர்களைத் தட்டிப் பேசுவதற்கே யாரும் கிடையாது. அநிருத்த பிரமராயர் கூட வெறுப்படைந்துதான் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார் என்று கேள்வி.”

“பழையாறையிலிருந்து சக்கரவர்த்தி தஞ்சாவூருக்கு எதற்காக வந்தார்? உனக்குத் தெரியுமா, தம்பி!”

“நான் கேள்விப்பட்டதைச் சொல்லுகிறேன்; மூன்று வருஷத்துக்கு முந்தி வீரபாண்டியன் போரில் மாண்டான். அச்சமயம் சோழர் படைகள் பாண்டிய நாட்டில் சில கொடூரங்களைச் செய்ததாகக் கேள்வி; யுத்தமென்றால் அப்படித்தானே? மதுரை சோழ ராஜ்யத்துக்கு உட்பட்டு விட்டது. ஆனால் வீரபாண்டியனுக்கு அந்தரங்கமான சிலர், எப்படியாவது பழிக்குப் பழி வாங்குவதென்று சபதம் எடுத்துக் கொண்டு சதி செய்கிறார்களாம். பழையாறையில் மன்னர் இருந்தால் அவரைப் பாதுகாக்க முடியாது என்று தான் அவரைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இங்கே கோட்டையும் வலிவுள்ளது; கட்டுக் காவலும் அதிகம்.அதோடு சக்கரவர்த்தியின் உடம்பு நலத்துக்கும் பழையாறையைக் காட்டிலும் தஞ்சாவூர் நல்லது என்று வைத்தியர்கள் சொன்னார்கள்.

“சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள். ஆனால் என்ன நோய் என்று மட்டும் யாருக்கும் தெரிவதில்லை.”

“தெரியாமல் என்ன? சக்கரவர்த்திக்குப் பக்கவாதம் வந்து இரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன.”

“அடடா! அதனால் அவரால் நடக்கவே முடிவதில்லையோ?”

“நடக்க முடியாது; யானை அல்லது குதிரை மீது ஏறவும் முடியாது; படுத்த படுக்கைதான். பல்லக்கில் ஏற்றி இடத்துக்கு இடம் கொண்டு போனால்தான் போகலாம் அதிலும் வேதனை அதிகம். ஆகையால் சக்கரவர்த்தி அரண்மனையை விட்டு வெளிக் கிளம்புவதே இல்லை. சில காலமாகச் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லையென்றும் சொல்கிறார்கள்.”

“ஆஹா! என்ன பரிதாபம்!”

“பரிதாபம் என்று கூடச் சொல்லக் கூடாது, அண்ணா! அதுவும் ராஜ நிந்தனை என்று சொல்லிப் பழுவேட்டரையர்கள் தண்டனை விதிப்பார்கள்.”

பழுவேட்டரையர்! பழுவேட்டரையர்! – எங்கே, யாரிடம் பேசினாலும் பழுவேட்டரையர்களைப் பற்றியே பேச்சு! அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளாய் இருந்தால்தான் என்ன? தன பொக்கிஷம்; தானியக் களஞ்சியம், தஞ்சை நகர்க் காவல், ஒற்றர்படை எல்லாம் அவர்களுடைய வசத்தில் இருக்கும்படி சக்கரவர்த்தி விட்டிருக்கக் கூடாது. இவ்வளவு அதிகாரத்தையும் அவர்களிடம் விட்டதனால் அல்லவா சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள்? இவர்களுடைய சதி எவ்வளவு தூரம் பலிக்குமோ? அது பலிக்காமல் போக நம்மால் இயன்ற பிரயத்தனம் செய்ய வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் சக்கரவர்த்திக்கும் எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்!… இதற்குள் கோட்டை வாசல் வந்து விட்டது. சேந்தன் அமுதன் தனது புதிய நண்பனைப் பிரிந்து தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான். வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply