2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் | SANI PEYARCHI 19.12.17 to 26.12.20

0
54

சந்தோஷமே அருள்வார் சனிபகவான்!

ம்மில் பலபேருக்கு சனி எனும் பெயரைக் கேட்டதுமே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.  அது தேவையில்லை. `ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனி பகவான்… கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர்.

இவரது மகிமைகளை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. சனிபகவான் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தொல்லியல் துறை, விஞ்ஞானம், மருத்துவம் முதலான துறைகளில் சாதிக்கலாம்.

லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், பணம்-பெயர்-புகழ் பெருகும். அரசியலிலும் கோலோச்சலாம். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். 8-ல் சனி அமர்ந்திருப்பின் பர்வத யோகம்; மலை போன்று சொத்துகள் குவியும். சனி பகவான் 10-ல் பலமாக நிற்க, மந்திரிக்குச் சமமான பதவி, தனம், ஜெயம் உண்டு. வணிகம் செய்பவர் எனில், இயந்திர தொழிற்சாலைகள் அமைக்கும் பாக்கியமும் உண்டு. 11-ல் சனி இருக்க, அந்த நபர் புண்ணியவானாக இருப்பார்; எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

வரும் சனிப் பெயர்ச்சியையொட்டி  தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்ம சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும்  வரவுள்ளார். அதேபோல் மகர ராசிக்காரர்களுக்கு எழரைச் சனி ஆரம்பம். அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஜனன ஜாதகத்தில் சனிபகவான் பலத்துடன் திகழ்ந்தால் நல்லவையே நடக்கும். அத்துடன், மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம்.

சனிக்கிழமை தோறும் விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்திருக்கும் சனீஸ்வரருக்கு, மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும்.

சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் காசு தானம் செய்வதும் மனதுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரும்.

திருநள்ளாறு, குச்சனூர், ஏரிக்குப்பம், திருக்கொள்ளிக்காடு  முதலான சனி பரிகாரத் தலங்களுக்குச் சென்று அவரை தரிசிப்பதாலும் பலன் உண்டு.  எல்லாவற்றுக்கும் மேலாக ஆனைமுகனையும் ஆஞ்சநேயரையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்… உங்களை, வாழ்வாங்கு வாழ வைப்பார் சனி பகவான்!

சனிபகவானின் திருவருளைப் பெறும் பொருட்டு தசரதச் சக்கரவர்த்தி அருளிய ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இது. சனி பாதிப்பு உள்ளவர்கள் என்றில்லை, எல்லோருமே இதைப் படித்து வணங்கி பயனடையலாம்.

இந்த சனைச்சர ஸ்தோத்திரத்தை படிப்பதால் சனி கோசாரரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களிலிருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், அவனது தசா புக்திகளில் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதோடு சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

கோணோந்தகோ ரெளத்ரயமோஸத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸௌரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

கருத்து: கோணன் முடிவைச் செய்பவன். ரௌத்ரன் இந்திரியங்களை அடக்குபவன். பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸுர்யபுத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனைச்சரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவனாகி சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.

 

Leave a Reply