Karthigai Madha Rasipalan | கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2017 முதல் 15-12-2017 வரை

0
37

மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் மேஷ ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியைக் குருபகவான் பார்க்கிறார். அவரோடு தன சப்தமாதிபதியான சுக்ரனும், சுகாதிபதியான சந்திரனும் கூடியிருக்கிறார்கள். எனவே சுகங்களும், சந்தோஷங் களும் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். பகல்- இரவு பாராமல் பாடுபட்டதற்கேற்ற பலன்கள் இப்பொழுது கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவர் 8-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர். அஷ்டமாதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் சில எதிர்பாராத நல்ல தகவல்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும். கடன் சுமை அளவிற்கு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் ஒரு தொகை கிடைக்கும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், அது விலகுவதற்கான நேரமிது. சனி விலகுவதற்கு 2 மாதங் களுக்கு முன்னதாகவே நற்பலன்களைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, நல்ல நேரம் தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்பட்ட நீங்கள், இனித் துணிந்து செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான் என்று பழமொழியைச் சொல்லி வைத்தார்கள். மந்தன் என்று சனிபகவானை அழைப்பது வழக்கம். சனியை விலகும் சமயத்தில் வழிபட்டால் எந்த நாளையும் இனிய நாளாக அமைத்துக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. எனவே திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக் கோவில், குச்சானூர், நல்லிப்பட்டி, திருக் கொடியலூர் போன்ற சிறப்பு தலங்களுக்கு, உங்கள் ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வரலாம்.

பார்க்கும் குருவையும் பலப்படுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். திருக்கார்த்திகைத் திரு நாளில் கந்தப்பெருமான் சன்னிதியில் கவசம் பாடி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

சுக்ரன் உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தன, சப்தமாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வைத்திருப்பார். அதே நேரத்தில் நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கின்றார். 8-ல் சுக்ரன் மறையும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்ற கவலை அகலும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், பெற்றோர்களின் மணி விழாக்களை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். டிசம்பர் 10-ந் தேதி சுக்ரன் வலிமையிழக்கும் பொழுது, மாதக் கடைசியில் பற்றாக்குறை பட்ஜெட் உருவாகலாம். எனவே திட்டமிட்டுச் செலவு செய்வது நல்லது.

செவ்வாய் பெயர்ச்சி காலம்

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். ராசிநாதன் சப்தம ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது, நன்மைகளை அதிகம் செய்வார். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வீடு கட்டிக்குடியேற வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் இப்பொழுது வரப்போகின்றது. சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

புதனின் வக்ர காலம்

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, விருச்சிக ராசிக்குள் இருக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். 3,6-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் பழிகள் அகலும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 21,22,27,28 டிசம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். சுபகாரியப் பேச்சு கள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்ரன் பலமிழக்கும் நேரத்திலும், புதனின் வக்ர காலத்திலும் பற்றாக்குறை ஏற்படலாம். தாய்வழி ஆதரவு உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் கேட்ட உதவிகளும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கலாம். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

எதையும் வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டம லாபாதிபதியான குருவும் இணைந் திருக்கிறார். அஷ்டமாதிபதி 6-ல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திடீர் மாற்றங்கள் பலவும் இம்மாதத்தில் நடக்கலாம். செய்யும் தொழிலில் உயர்வு, செயல்பாட்டில் வெற்றி போன்றவை ஏற்படும். வேலைக்காக விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருந்தவர்களுக்கு, எதிர்பார்த்த வேலை அமையும். நேர் முகத் தேர்விற்கு அழைப்புகள் வந்து சேரும். வருமானம் வருவதற்கான வழியைக் கண்டு கொள்வீர்கள்.

சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் சூரியனோடும், புதனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். புத-ஆதித்ய யோகம் செயல்பட்டாலும், சூரிய, சனி சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் வழியில் பிரச்சினைகள் உருவாகி மறையும். பங்காளிப் பகை வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை, பெரியோர்களின் தொடர்புகளாலும், பஞ்சாயத்துகளாலும் தீர்த்துக் கொள்வது நல்லது.

சனி விலக ஆயத்தமாகும் நேரம் என்பதால், ஆரோக்கிய பாதிப்புகள் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். நோய்க்கான அறிகுறிகள் தெரியும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புகள் கருதியும் நீங்கள் எடுத்த புது முயற்சிகள் கைகூடும். படித்து பட்டம் பெற்றவர்களுக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கை கூடும்.

பொதுவாக நந்தி வழிபாடு உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பதால், பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதி என்பதால், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க, செவ்வாய்க்குரிய தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானை, திருக்கார்த்திகைத் திருநாளில் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போவதால் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பு நீங்கும். கருத்து வேறுபாடுகள் அகலும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். உயர்ந்த மனிதர் களின் சந்திப்பு கிடைக்கும். பணவரவு போதுமானதாக இருக்கும். பழுதான வாகனங்களை சரிசெய்ய வாய்ப்புகள் கைகூடி வரும். தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களையும், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு 7,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ஒரு வழிக்கு யோகம்தான். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நமது சம்பாத்தியம் மட்டும் போதாது; வாழ்க்கைத் துணையும் சம்பாதித்தால் தான் மிதமிஞ்சிய பொருளாதாரம் கிடைக்கும் என்று நினைத்தவர்களின் விருப்பங்கள் ஈடேறப் போகிறது. உதிரி வருமானங்கள் பெருகும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை, முன்னின்று நடத்திப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். தன பஞ்சமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படலாம். சூரியபலம் நன்றாக இருப்பதால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 25,26,29,30 டிசம்பர்: 5,6,9,10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் 6-ல் சஞ்சரிப்பதாலும், அவரோடு குரு இணைந்திருப்பதாலும் புதிய திருப்பங்கள் ஏற்படும். புகழ் மிக்கவர்கள், உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கைகூட வழிவகை செய்து கொடுப்பர். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்தபடியே சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகள் வழியே வந்த பிரச்சினை தீரும். தாய்வழி ஆதரவு உண்டு. டிசம்பர் 10-ந் தேதிக்கு மேல் எதிர்பாராத விரயங்களை சந்திக்க நேரிடும். ஒருசிலருக்கு வெளிநாடு செல்லும் அனுகூலம் உண்டு. சுப்ரமணியர் வழிபாடு சுகங்களையும், சந்தோஷங் களையும் வழங்கும்.

அன்பிற்கு மட்டுமே அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சகாய ஸ்தானத்திற்கு அதிபதி சூரியனுடன் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல குருவின் பரிபூரண பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பட்ட கஷ்டங்கள் தீர்ந்தது என்று பலரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும்.

மங்கல ஓசை, மனையில் கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். வாசல் வரை வந்து திரும்பிய வரன்கள் கூட மீண்டும் வரலாம். வியாபாரப் போட்டிகள் விலகும். வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற சிலரது எண்ணம் கைகூடும் நேரம் இது. உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் அகலும். குருப்பெயர்ச்சியாகியும் குழப்பங்கள் அகலவில்லையே, செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எல்லாம் நல்ல விதத்தில் முடியும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வரும் என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது வெளிநாட்டு தொடர் புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரப்போகிறது.

2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. திரண்ட செல்வத்தைக் கொடுக்கும் 2-ம் இடத்து ராகு என்பது ஜோதிட மொழி. எனவே தொழில் வளர்ச்சியும், வரும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்கள் மூலம் வருமானங்கள் வந்து சேரும். அதே நேரத்தில் அஷ்டமத்து கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் திடீர், திடீரென விரயங்களும் உருவாகலாம். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.

மேலும் நாக சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில், உங்களுக்கு அனுகூலம் தரும் தலங்களைத் தேர்ந்தெடுத்து செய்து வருவது நல்லது. இம்மாதம் திருக்கார்த்திகை வருகிறது. அதற்கு முதல்நாள் பரணிதீபம் ஏற்றுவது வழக்கம். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகளை அதிகம் வரவழைத்துக் கொள்ளலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பஞ்சம விரயாதிபதியான சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் உருவாகும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசியல் ஈடுபாடு கொண்டவர் களுக்கு மேலிடத்து ஆதரவுடன், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். அங்குள்ள குருவுடன் செவ்வாய் சேருவதால், குரு – மங்கல யோகம் உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். நல்ல தகவல்கள் இல்லம் தேடிவரும். நாகரிகப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகை செய்து கொடுப்பர். கடன் சுமை குறையும். வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும்.

புதனின் வக்ர காலம்!

உங்கள் ராசிநாதன் புதன், 4-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வக்ர இயக்கத்தில் புதன் இருக்கப்போவதால், செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். வாகனப் பழுதுகளால் கவலை கொள்வீர்கள். வாய்ப்புகள் வாசல் தேடி வந்தும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

இம்மாதம் கேது பிரீதியாக சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 27,28, டிசம்பர்:1,2,7,8,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு

மங்கையர்களுக்கான பலன்கள்!

சுபச்செலவுகள் அதிகரிக்கும் மாதம் இது. பொருளாதார நிலை உயரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். கணவன்-மனைவி உறவு பலப்படும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடி வந்து இணைவர். பிள்ளைகளால் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைக்கும். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயரதிகாரிகளுடன் ஏற்பட்ட பகை மாறும். பதவி உயர்வு கிடைப்பதற்கான பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். பெற்றோரின் மணி விழா, முத்து விழாக்களை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒருசிலருக்கு உண்டு. செந்தில்நாதன் வழிபாடு வந்த துயரங்களைத் தீர்க்கும்.

வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும் வரை முயற்சிக்கும் கடக ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் சுக ஸ்தானத்தில் குருவோடு இணைந்து குரு- சந்திர யோகத்தை உருவாக்குகிறார். தனாதிபதி சூரியன் சகாய, விரயாதிபதி புதனுடன் கூடி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குரு பார்வை 8,10,12 ஆகிய 3 இடங்களில் பதிகின்றது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்புகள் வந்து சேரும். பயணங்களால் வளர்ச்சி உண்டு. இடமாற்றம், வீடுமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மதிப்பும், மரியாதையும் உயரும். கூட்டாளிகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர். ஜென்மத்தில் ராகு இருப்பதால் சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் பலமாக உள்ளது. எனவே கனவிலும், நனவிலும் நாகதரிசனம் வந்து செல்லும். அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. ராகு-கேதுக்கள் லக்னத்தில் இருக்கும் பொழுது, வாழ்விலும், பொருளாதார நிலையிலும் ஏற்ற- இறக்கம் வந்து கொண்டேயிருக்கும். எப் பொழுதும் பொருளாதார நிலை சமநிலையில் இருக்க, ராகு-கேதுக்கள் வழிபாடு சிறப்பானது. அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து நன்மை தரும் நட்சத்திர நாளில் வழிபட்டு வருவது நல்லது. இம்மாதம் திருக்கார்த்திகை நாளில் கதிர்வேலனை வழிபட்டு வருவதன் மூலம் கவலைகள் உங்களை விட்டு அகலும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக லாபாதிபதியாக விளங்கு பவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தற்சமயம் அவர் 3-ல் இருப்பதால் சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும். பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். தொழில் முயற்சிக்கு, வங்கிகளில் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறும் பொழுது இடமாற்றம், வீடுமாற்றம் உருவாகலாம். குடியிருக்கும் வீட்டை ஒரு சிலர் விலைக்கு வாங்க முன்வருவர். சகோதரர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை விரயம் செய்ய நேரிடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

இம்மாதம் செவ்வாய் தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:17,18,29,30, டிசம்பர்: 3,4,9,10,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப ரகசியத்தை வெளியில் சொல்லியதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று ஒரு சிலருக்கு உத்தியோக வாய்ப்பு கிடைக்கலாம். சர்ப்ப சாந்தி செய்வதன் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

மனசாட்சிக்கு மட்டுமே பயப்படும் சிம்ம ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன லாபாதிபதியான புதனும், 6,7-க்கு அதி பதியான சூரியனும் இணைந்திருக்கின்றனர். எனவே, பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம்.. என்று செய்து முடிப்பீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும்.

புத-ஆதித்ய யோகம் செயல்படும் இந்த நேரத்தில், புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்புலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஊர் மாற்றங்களால் ஒருசிலருக்கு நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல காரியமொன்று இல்லத்தில் நடைபெறலாம். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனி கடந்த 2½ ஆண்டு காலமாக இருந்து வந்தது. அது டிசம்பர் 19-ந் தேதி சனிப்பெயர்ச்சியோடு விலகப்போகிறது. பெயர்ச்சிக்கு 2 மாதம் முன்ன தாகவே சனி, நற்பலன்களைக் கொடுக்கத் தொடங்கி விடுவார். எனவே இதுவரை இருந்த தடைகள் அகலும். இயல்பாகவே நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக உங்களுக்கு அனு கூலம் தரும் நாளில், சனிக்குரிய சிறப்பு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. இழப்புகளை ஈடுசெய்யவும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும், சனி பகவானின் அருள் உங்களுக்குத் தேவை. விலகும் சனியால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எனவே முதல்சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்ற அடிப்படையில் உங்களுக்கு எத்தனையாவது சுற்றில் சனி வருகின்றது என்பதை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குறிப்பாக திருநள்ளாறு, குச்சானூர், திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக்கோவில் போன்ற தலங்களில் வீற்றிருக்கும் சனிபகவானை வழிபடுவது உகந்தது. திருக்கார்த்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். விருச்சிக ராசிக்குச் செல்லும் கிரகத்தால் விருத்தியம்சங்கள் நிறைய ஏற்படும். குறிப்பாக 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவார். எதிர்பாராத தனலாபம் இல்லம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு புதிய தொழில் தொடங்க முன்வருவார். தொழில் நடத்துபவர்கள் நடக்கும் தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு யோக காரகனாக விளங்கும் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நற்பலன்கள் இனிதே கிடைக்கும். பொது நலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் இருந்த குழப்ப நிலை மாறும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உடல்நலம் சீராகும். பூர்வீகச் சொத்துகளை பாகப்பிரிவினைகள் மூலம் பங்கிட்டுக் கொள்வீர்கள். பழைய சொத்துகளை கொடுத்துவிட்டு புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் ஒரு சிலருக்கு உண்டு.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். விருச்சிகத்தில் வக்ரம் பெறும் புதன், உறவினர் பகையை உருவாக்கலாம். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவேண்டிய பணம் தாமதப்படலாம். வாகனங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். சுபவிரயங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி, அனுமன் ஆகியவர்களின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:18,19,20, டிசம்பர்:1,2,5,6,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் தடைபட்ட சுபகாரியங்கள் நடை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். அன்பும், பாசமும் கூடும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். ஒருசிலருக்கு சுயதொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சொந்தங்களின் ஒத்துழைப்போடும், சுற்றியிருப்பவர்களின் ஆதரவோடும் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வேலவன் வழிபாடு வெற்றியை வழங்கும்.

நல்லவர்களின் வாழ்க்கையை பின்பற்றி வாழச் சொல்லும் கன்னி ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். 2-ம் இடத்தில் குரு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் யோகம்தான்.

அதே நேரத்தில் டிசம்பர் 19-ந் தேதி முதல் சனி உங்களைத் தொடர ஆரம்பிக்கிறது. 4-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அதை ‘அர்த்தாஷ்டமச் சனி’ என்று அழைப்பது வழக்கம். அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமை இதற்கு உண்டு. அப்படிப்பட்ட சனியின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு வருவதற்கு முன்ன தாகவே, உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, அதற்குரிய வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அது உடனடியாக கைகூடும். கடன் சுமை குறைய பூர்வீகச் சொத்துகளை விற்க நேரிடும். தற்சமயம் கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். கன்னிச் செவ்வாயில் கடலும் வற்றும் என்பார்கள். அதற்கு ஏற்றார் போல் கிரக நிலைகள் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் வரலாம்.

எனவே மாதம் தொடங்கியதும், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் ஆடை, ஆபரணங்கள், விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வதில் கவனம் செலுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றங்களும், தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்க திருக்கார்த்திகை நாளில் கந்தப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

விருச்சிக ராசிக்கு சுக்ரன் நவம்பர் 28-ந் தேதி பெயர்ச்சியாகிச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2,9-க்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணப்பற்றாக்குறை அகலும். ஒரு சிலருக்கு நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து எடுத்த முடிவால் உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தந்தை வழி உறவினர்களால் தகுந்த ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் பெயர்ச்சி யாகிறார். 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 2-ல் சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த விரோதங்கள் விலகும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், எடுத்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, புதன் வக்ர இயக்கத்தில் விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக் கிறார். ராசிநாதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை, பணக்கவலை இரண்டும் ஏற்படும். உங்கள் மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது கஷ்டம்தான். வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,21,22,23, டிசம்பர்: 3,4,7,8,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர் வருகை அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். வீடு மாற்றங்களைத் திருப்திகரமாக ஏற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்களின் உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறப் போவதால், அதற்கு முன்னதாகவே தசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது. சிங்காரவேலவன் வழிபாடு ஜெயத்தை வழங்கும்.

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக விளங்கும் துலாம் ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக் கிறார். அவரோடு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும் இணைந்திருக்கிறார். சந்திர பலத்தோடு இந்த மாதம் பிறக்கிறது. எனவே தனவரவு திருப்திகரமாக இருக்கும். தக்க விதத்தில் குடும்ப முன்னேற்றம் கூடும். தொழில் வளர்ச்சி உண்டு. நண்பர்களின் நல் ஆதரவோடு வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.

தற்சமயம் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. இருந்தாலும் டிசம்பர் 19-ந் தேதி சனி விலகப் போகிறது. விலகிய பின்னால் மிக அற்புதமான பலன்கள் நடைபெறும். குறிப்பாக மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தென்படும். மூத்த சகோதரர் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடிவரும்.

தன ஸ்தானத்தில் விரயாதிபதி புதன் இருக்கிறார். அவரோடு லாபாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக் கிறார். இந்தப் புத-ஆதித்ய யோகம் சிறப்பானது என்றாலும், அவரோடு சனியும் சேர்ந்திருப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் தடைகள் வரலாம். கடல் தாண்டிச் செல்லும் முயற்சிகள் கைகூடவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வீடு மாற்றங்கள் அல்லது உத்தியோக மாற்றங்கள் விரும்பியபடி வந்து சேரும். சனி விலகுவதற்கு முன்னதாகத் திடீர் மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கலாம். வீடு மாற்றம் நல்ல மாற்றமாகவே வந்து சேரும்.

ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் உள்ள ராகு முத்தான பலன்களைக் கொடுப்பார் என்பது முன்னோர்கள் வாக்கு. எனவே உத்தியோகத்தில் உள்ளவர்களில் ஒரு சிலர் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அதற்கு தேவையான பொருளாதாரமும் வந்து சேரும். சனிக்குரிய சிறப்பு தலங்களாக விளங்கும் திருநள்ளாறு அல்லது பெரிச்சி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

இம்மாதம் திருக்கார்த்திகை திருநாள் வருவதால் அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறது. உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் 2-ல் சஞ்சரிக்கும் பொழுது புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். நூதனப் பொருட்சேர்க்கை உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். இல்லம் கட்டிக் குடியேறுவதில் இருந்த தடை அகலும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2,7-க்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது நன்மைகள் அதிகம் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முன்வருவீர்கள். தாய்வழி உறவினர்களால் தக்க உதவி கிடைக்கும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் தொடங்கும். அங்காரக வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள இயலும்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, விருச்சிக ராசிக்குள் புதன் வக்ர இயக்கத்தில் இருக் கிறார். உங்கள் ராசிக்கு 9,12-க்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதியான புதன் 2-ல் வக்ரம் பெறும்பொழுது, நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக பயணங்களில் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடியே பதவி உயர்வு கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவையும், வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரனையும் வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- 

நவம்பர்:18,19,25,26, டிசம்பர்:5,6,9,10,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

மங்கையர்களுக்கான பலன்கள்!

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும் மாதம் இது. உறவினர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க முக்கியப் நபர்களின் ஒத்துழைப்பு உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏழரைச் சனி விலகும் நேரம் என்பதால் எதிர்பார்த்த நற்பலன்கள் வரப்போகிறது. சுப நிகழ்ச்சிகள் குறிப்பிட்டபடி நடைபெற சந்தர்ப்பங்கள் கை கூடிவரும். கணவன்- மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களை நம்பி, புதிய பொறுப்புகளை தலைமை அதிகாரி ஒப்படைப்பார். வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டும் மனம் விட்டுப் பேசும் விருச்சிக ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். உங்கள் ராசியிலேயே தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும், சகாய ஸ்தானாதிபதி சனியும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானம் இருமடங்காகும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீண்டும் தொடரும். பதவியில் உள்ளவர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலை மோதும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடலாம். புத- ஆதித்ய யோகம் இருப்பதால் செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல சூரிய பலம் கைகொடுக்கும்.

அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளுக்கு வங்கிகளில் கடன்உதவி கிடைக்கலாம். 9-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்புகள், வீட்டை விரிவு செய்யும் அமைப்புகள், புதிய தோட்டம் வாங்கி விவசாயம் செய்து பணவரவை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நேரமிது. உடன் பிறந்தவர்களும், உடன் இருப்பவர்களும் உதவியாக இருப்பார்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கலாம். குரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள். திருக்கார்த்திகையன்று வடிவேல வன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஜென்மச் சனி விலகும் நேரம் வந்து விட்டது. இனி உங்களுக்கு உடலில் புது உற்சாகம் குடிகொள்ளும். சனி விலகுவதற்கு முன்னதாகவே திருநள்ளாறு, குச்சானூர், பெரிச்சிக்கோவில், நல்லிப்பட்டி, திருக்கொள்ளிக்காடு, திருக்கொடியலூர் போன்ற தலங்களில் உள்ள சனீஸ்வர பகவானை சென்று வழிபட்டு வருவது நல்லது. அனுகூல நாளில் சென்று வழிபட்டால் அனைத்து யோகங்களும் கிடைக்கும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி உங்கள் ராசியான விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். இதன் விளைவாக மிகுந்த நற்பலன்கள் வந்து சேரப்போகிறது. சப்தம விரயாதிபதி, ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தங்கம், வெள்ளி வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டு. அவர்களின் உத்தியோக நலன் கருதி ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வருகிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது விபரீத ராஜயோகம் செயல் படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமைமிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிகள் செய்வர். எதிரிகள் விலகுவர். தொட்டது துலங்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடிவரும். தொழில் முன் னேற்றம் கூடும் நேரமிது.

புதனின் வக்ர இயக்கம்!

புதன் உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாபாதிபதி மட்டுமல்ல, அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் வலிமையிழக்கும் இந்த நேரம் உங்களுக்கு ஒரு பொற் காலமாக அமையும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேஇருக்கும். திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். தூரதேச அழைப்புகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. பேறும், புகழும் அதிகரிக்கும் நேரமிது.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதோடு, சர்ப்ப சாந்திப் பரிகாரமும் செய்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 21,22,23,27,28, டிசம்பர்: 7,8,9,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

அமைதியும், ஆனந்தமும் ஏற்படும் மாதம் இது. எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு வாங்கும் யோகம் முதல், விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகள் வரை அனைத்தும் கை கூடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தாயின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. செல்வமுத்துக்குமரன் வழிபாடு செல்வ வளம் பெருக்கும்.

கோபம் இருக்கும் அளவுக்கு குணத்தோடு நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சந்திரனும் இணைந்திருக்கிறார். எனவே இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகவே அமையப் போகிறது. உத்தியோக முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பதவி உயர்வு வரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

இல்லம் கட்டிக் குடியேறுவதா? அல்லது வீடு வாங்கிக் குடியேறுவதா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள், சுய ஜாதகத்தில் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு செவ்வாய் பலம் பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்து முடி வெடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் பொதுவாக தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்சம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாக குரு விளங்குவதாலும் வீடு கட்டிக் குடியேறு வதைவிட, வீடு வாங்கிக் குடியேறுவது நல்லது.

தற்சமயம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எனவே சுபவிரயமாக அதை மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். வீடு, இடம், தோட்டம், துரவு வாங்குவது, சுப காரியங்களை இல்லத்தில் நடத்துவது, விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

மாதத் தொடக்கத்தில் 10-ல் செவ்வாய் இருப்பதால், அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து, தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தற்சமயம் விரயச்சனியின் ஆதிக்கம் விலகும் நேரம் வந்துவிட்டது. டிசம்பர் 19-ந் தேதி விரயச் சனி விலகி, ஜென்மச் சனியாக மாறுகிறது. சனி உங்கள் ஜாதகத்திற்கு யோகம் செய்யும் கிரகமாகும். விலகுவதற்கு முன்னதாகவே தன சகாய ஸ்தானாதிபதியான சனியை, அதற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பணத்தேவையும் பூர்த்தியாகும். பணியில் இருந்த தொய்வும் அகலும்.

இம்மாதம் திருக்கார்த்திகைத் திருநாள் வருகின்றது. அன்றைய தினம் வடிவேலவன் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார விரோதங்கள் விலகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்போடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் தானாகத் தேடிவரலாம். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குச் செல் கிறார். உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயத்திற்கு ஏற்ற லாபம் வந்து சேரும். ஒரு காரியத்தைத் தொடங்கினால், அதற்கான பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். புதிய சொத்துகள் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை விருச்சிக ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, எதிர் பாராத திருப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாய் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணி மாற்றத்திற்காக செய்த முயற்சிகள் பலன் தரும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அகலும். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,25,26,29,30, டிசம்பர்:9,10,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் மாதம் இது. புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ள வர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் வரலாம். விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் சுப விரயங்கள் உண்டாகும். புதிய ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி பலன் தரும். கார்த்திகைத் திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதோடு, ஒவ்வொரு சனிக்கிழமையும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது.

வாழ்வில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கும் மகர ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு வீற்றிருக்கிறார். எனவே சர்ப்ப கிரகங்களின் இயக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் அஷ்டமாதிபதி சூரியனும், 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும், உங்கள் ராசிநாதன் சனியும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம்.

புத-ஆதித்ய யோகம் இருந்தாலும், சூரிய, சனி சேர்க்கை இருப்பது அவ்வளவு நல்லதல்ல. தந்தை-மகன் உறவில் விரிசல்களும், உறவினர் பகையும் உருவாகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் அனுசரிக்கும் தன்மை குறையலாம். எண்ணங்கள் நிறைவேறுவதில் சில இடையூறுகளும் ஏற்படலாம். எனவே ராகு-கேது பிரீதி செய்வதும், சனிக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நற்பலன்களை வழங்கும்.

10-ல் உள்ள குருபகவான் இப்பொழுது வலிமை பெற்றிருக்கிறார். எனவே பதவி உயர்வில் இதுவரை இருந்த தடைகள் அகலும். சக பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்வர். நேர்முகத் தேர்விற்குச் சென்று இதுவரை வெற்றி வாய்ப்புகளை நழுவ விட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்குகிறது. எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கலாம்.

சுக்ர பலம் நன்றாக இருப்பது யோகம் தான். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தம் சொந்த வீட்டில் குருவோடு இணைந்திருக்கும் பொழுது, திடீர் திருப்பங்கள் பலவும் ஏற்படுத்துவார். நடபெறாது என்று நீங்கள் நினைத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று ஆதாயத்தைக் கொடுக்கும். நடைபெறும் என்று நினைத்த காரியங்கள் நடபெறாமல் போகலாம். எனவே இதுபோன்ற காலங் களில் நவக்கிரக சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்குத் திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நீண்ட தூரப் பயணம் நேரிடும்.

இம்மாதம் திருக்கார்த்திகைத் திருநாள் வருகின்றது. அன்றைய தினம் முறையாக விரதமிருந்து முருகப்பெருமான் சன்னிதியில் விளக்கேற்றி வைத்துக் கவசம் பாடி வழிபடுவதன் மூலம் காரியத்தடை அகலும். அதுமட்டுமல்ல கல்யாண வாய்ப்புகளும் கைகூடலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தநேரம் யோகம் தான். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். அவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயில, வேலை பார்க்க வேண்டுமென்ற உங்களின் எண்ணம் ஈடேறலாம். பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். இதன் விளைவாக இடம், பூமி சேர்க்கை ஏற்படலாம். இதுவரை பத்திரப் பதவில் இருந்த தடை அகலும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரப் போட்டிகள் அகலும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் அனுகூலமாகும். குறிப்பாக உங்கள் வீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்யவோ, தொழில் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் விதத்திலோ அந்தத் தகவல் அமையலாம். சம்பளப் பாக்கிகள் வந்து சந்தோஷத்தை கொடுக்கும். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பால், வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும்பொழுது, வியாபார விரோதங்கள் விலகும். கடன் சுமை தீர புதிய வழி பிறக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து, அணிந்து அழகு பார்ப்பீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் வடக்கு நோக்கிய ஆனைமுகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:18,19,20,27,28, டிசம்பர்:1,2,11,12,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதமிஞ்சிய பொருளாதாரம் உருவாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தும் சூழ்நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு எடுத்துக் கொள்வீர்கள். கார்த்திகை விரதமிருந்து கந்தப்பெருமானை வழி படுவது நல்லது.

ஆன்மிகம் முதல் அரசியல் வரை கற்று வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கும் இடமான 10-ம் இடத்தில் ராசிநாதன் சஞ்சரிக்கும் பொழுது, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உருவாகும். தொழில் வெற்றிநடை போடும். பங்குதாரர்களால் ஏற்பட்ட பணப் பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக தொழில் செய்யலாமா? என்று சிந்திக்கத் தொடங்குவர்.

ராசிநாதன் சனியோடு சப்தமாதிபதி சூரியனும், பஞ்சம அஷ்டமாதிபதியான புதனும் இணைந்து சஞ்சரிப்பது யோகம்தான். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்த இடையூறுகள் அகலும். அதே நேரத்தில் கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

6-ல் ராகு இருப்பதால் பணப்பற்றாக்குறை அகலும். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பது ஜோதிட சாஸ்திர நியதி. எனவே பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிரிகள் விலகுவர். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லை அகலும்.

செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். எனவே வாகனங்களில் கூடுதல் கவனத்துடன் செல்வது நல்லது. குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பயப்படத் தேவையில்லை. மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் என்று சொல்லலாம். பழைய வாகனங்களில் பழுதுச் செலவுகள் அதிகரிக்கலாம். எனவே அதைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்ல நேரிடலாம். இருப்பினும் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வந்திணைவர்.

சூரிய, சனி சேர்க்கைக்குப் பரிகாரமாக பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வழிபடுவதோடு அனுமன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கார்த்திகைத் திருநாளில் வேலவனை வழிபடுவது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ போதுமான மூலதனம் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது தாய், தந்தையர் வழியில் கூட உதவிகள் கிடைக்கலாம். வாங்கிய இடத்தை விற்றுவிட்டு தொழிலுக்கான மூல தனத்தை வரவழைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். அஷ்டமாதிபதி செவ்வாய் விலகுவதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்து நல்ல விலைக்கு விற்று மிதமிஞ்சிய பொருளாதாரத்தைக் கொடுக்கும். 3-க்கு அதிபதி 9-ல் சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பஞ்சம அஷ்டமாதி பதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளின் வழியாக ஒரு பெரும் விரயம் ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. இனம்புரியாத கவலை மனதில் இடம்பெறும். எந்த வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும்.

இம்மாதம் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,21,22,29,30 டிசம்பர்: 4,5,12,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் தீரும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உறவினர்களில் ஒரு சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். தாய்வழி ஆதரவு உண்டு. நகை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். வாகனம் வாங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வள்ளி மணவாளன் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும் என்பதால், கார்த்திகை திருநாள் அன்று தீபமேற்றித் தரிசனம் செய்யுங்கள்.

நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் மீன ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு, அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே பிள்ளைகளால் சில விரயங்கள் ஏற்படலாம். வெளியூரில் வசிக்கும் பிள்ளைகளாக இருந்தால், அவர்களின் முன்னேற்றத்தில் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது. ஞானகாரகன் கேது 11-ல் இருப்பதால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்லும் யோகமும் உண்டு. முன்னோர்கள் கட்டிய கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒருசிலருக்கு வந்து சேரலாம்.

விரயாதிபதி சனி 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், முன்னோர்கள் வழி சொத்துகளில் முறையான பங்கீடு கிடைத்தாலும், அதை விலைக்கு கொடுத்துவிட்டுப் புதிய இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒருசிலர் வசிக்கும்இடத்திலேயே வீடு வாங்க முன்வருவர். செவ்வாய் பலம் 7-ல் இருப்பதால் இடம், பூமி சேர்க்கை ஏற்படும். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். அஷ்டமத்தில் செவ்வாய், சுக்ரன், குரு ஆகியவை இணைவது அவ்வளவு நல்லதல்ல. பல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். முன்கோபம் அதிகரிக்கும். முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறையோடு இருந்தாலும், செயல்படுவதில் சிரமங்கள் வரலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப் பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம்.

முக்கியமான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உலா வருவதால், எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

வியாழன் தோறும் குருபகவான் வழிபாடும், செவ்வாய் தோறும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது. திருக்கார்த்திகை திருநாளில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் துயரங்கள் துள்ளி ஓடும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். 3,8-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்திணைவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பயணங் களில் சந்திக்கும் நபர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண்வழிப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

செவ்வாய்ப் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் பெயர்ச்சி யாகிறார். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் சில தடைகள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகள் மேலோங்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். கட்டிடப் பணியை தொடர முடியாமல் போகலாம். உதவுவதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வக்ர காலத்தில் தான் யோகங்களைக் கொடுக்கும். எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சியில் பலன் கிடைக் கும். தாய்வழி ஆதரவு உண்டு. பங்காளிப் பகை மாறும். உத்தியோக முயற்சி வெற்றி தரும். தொழில் செய்பவர்கள் பழைய கூட்டாளிகள் விலகினால், புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள வழிபிறக்கும்.

இம்மாதம் பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 19,20,25,26, டிசம்பர்:1,2,6,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இதுவாகும். யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகல, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிக்க பிறர் கையை எதிர்பார்க்கும் நிலை வரலாம். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சண்முகப் பெருமான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

Leave a Reply