சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை: ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

0
19
Share on Facebook
Tweet on Twitter

சேலம்: சேலம் உள்பட 4 மாவட்டங்களில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை வெயிலின் உச்சபட்சமாக கருதப்படும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், வெயிலின் கொடுமை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியால் மக்கள் தவிக்கின்றனர். இருப்பினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் 6.30 மணியளவில் மழை கொட்ட தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வெங்கடேசபுரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், ஒரு பெரிய மரம் ஒன்றின் அடிப்பகுதி முறிந்து, அருகில் இருந்த கார் மீது விழுந்தது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய, விடிய மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் இதர பகுதிகளான தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உளிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.   சேலம் மாவட்டத்தில் மொத்தம் 324.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): வீரகனூர்-53, இடைப்பாடி-40, சேலம்-32.6, தம்மம்பட்டி-30.2, வாழப்பாடி-26.4, ஆணைமடுவு-26, கெங்கவல்லி-25.2, காடையாம்பட்டி-19, சங்ககிரி-15.4, ஓமலூர்-12, பி.என் பாளையம்-12, கரியகோயில்-11, ஏற்காடு-8.6, மேட்டூர்- 7.6, ஆத்தூர் 5.4. நாமக்கல்: நாமக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இரவு 12 மணி வரை பெய்த மழையால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் நகர் தவிர ராசிபுரம், குமாரபாளையம், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில், இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுச்சத்திரம், புதன்சந்தை பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு குளம், குட்டை, கிணறுகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இன்று காலை வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 275 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மழை அளவு விபரம் (மில்லிமீட்டரில்): நாமக்கல்-20, பரமத்தி வேலூர்-8, ராசிபுரம்-36, சேந்தமங்கலம்-23, திருச்செங்கோடு-25, எருமப்பட்டி-50, மங்களபுரம்-6, குமாரபாளையம்-45, மோகனூர்-59, புதுச்சத்திரம்-3.  தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் நேற்று மழை பெய்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தர்மபுரி-அரூர் சாலையில் உள்ள வேப்பமரத்துபட்டி பகுதியில் சாலையோரமாக இருந்த ஆலமரம், புளியமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்களே மரத்தின் கிளைகளை தனித்தனியாக வெட்டி முழுவதுமாக அகற்றினர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 128.10 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): பாலக்கோடு-72, மாரண்டஅள்ளி-17.40, தர்மபுரி-14.50, அரூர்-8.20, பாப்பிரெட்டிப்பட்டி-8, பென்னாகரம்-5, ஒகேனக்கல்-3.  கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணியளவில் வானில் மேகக்கூட்டம் திரண்டு, மழை பெய்ய தொடங்கியது. போச்சம்பள்ளி, மத்தூர், சாமல்பட்டி, கண்ணன்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.  சந்தூர் வெப்பாலம்பட்டியை சேர்ந்த மாதம்மாள் என்பவர் வீட்டிற்கு அருகே டீ கடை நடத்தி வருகிறார். நேற்று குழந்தைகளுடன் கடையில் இருந்தார். அப்போது, வீசிய சூறாவளி காற்றால் அங்கிருந்த புளியமரம் வேருடன் சாய்ந்து, மாதம்மாள் வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதவிர மத்தூர் பகுதியில் ஏராளமான பனை மரங்களும் சாய்ந்தன.  புதுச்சேரி சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் பகுதியில், தமிழரசன் என்பவரது வீட்டின் மேற்கூரை சேதம் ஆனது. செல்வி, குப்பன் என்பவர்களது வீடுகள் தரைமட்டம் ஆகின. சரவணன் என்பவரது ஒரு ஏக்கர் புடலங்காய் தோட்டம் நாசமானது. மனோகரன், ஞானசேகர், தேவேந்திரன், சண்முகசுந்தரம், அன்பரசன், கர்ணன் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மரங்களில் இருந்து சுமார் 2 லட்சம் தேங்காய்கள் உதிர்ந்தன. 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பழனம்பாடி பகுதியில் பசுமாடு மீது மரம் விழுந்து, மாடு பலியானது. வேப்பனஹள்ளி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாங்காய்கள் பெருமளவில் உதிர்ந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 239.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்): போச்சம்பள்ளி-40.80, பாரூர்-36.40, சூளகிரி-29, தேன்கனிக்கோட்டை-27, பெனுகொண்டாபுரம்-25.20, தளி-25, நெடுங்கல்-14.60, கிருஷ்ணகிரி-11.80, ஓசூர்-11, அஞ்செட்டி-10, ராயக்கோட்டை-5, ஊத்தங்கரை-3.40. இதனிடையே பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleஓசூரில் அட்டகாசம் செய்த 25 யானைகள் விரட்டியடிப்பு: விவசாயிகள், மக்கள் நிம்மதி
Next articleஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 42வது நாளாக நெடுவாசல் போராட்டம்

Leave a Reply Cancel reply